கட்டசேரி ஜோசப் ஜேசுதாஸ் என்ற அந்த இசையின் இமயம் இன்று 71ஆவது அகவை காண்கின்றது. அதேபோல் திரைப்படப்பாடல்த்துறையில் இந்தவருடம் தனது 50ஆவது ஆண்டை பூர்த்தியும் செய்கின்றது.
சில கலைஞர்கள், உருவாகின்றார்களா? அல்லது பிறக்கின்றார்களா? என்ற பெரியதொரு புதிர் என் நெஞ்சத்தை எப்போதும் சல்லடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி. உருவாக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை பிறக்கின்றார்கள் என்ற பக்கம் நெஞ்சத்தை இழுத்துச்செல்லும் கலைஞர்கள் பட்டியலில் இதயத்தின் முதன்மையானவராக இருக்கின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.
என்னைப்பொறுத்தவரை கருவில் இருந்து இன்றுவரை நான் ஜேசுதாஸின் குரலுக்கு அடிமை என்று எந்த ஆவணத்திலும் மறைக்காமல் எழுதித்தரும் மனநிலையில் உள்ளவன்.
அப்பா… என்ன ஒரு ரம்மியமான குரல், இராக ஆலாபலனை! உணர்வுகளை மனதிற்குள் பிழிந்து, உடலின் ஒவ்வொரு செல்லையும் அமைதியாக பூக்களாலும், மயிலிறகாலும் வருடிவிடுவதுபோன்ற ஒரு உணர்வைத்தரும் ஜேசுதாஸின் குரல்.
ஜேசுதாஸின் தோற்றத்திலேயே பார்ப்பவர்கள் மனதில் ஒரு கௌரவம் அவருக்கு கிடைத்துவிடும், குரலையும், ஆலாபனைகளையும் கேட்டுவிட்டால் சொல்லவும் வேண்டுமா என்ன?
ஒரு காட்சி!! இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது. அப்போதைய கறுப்பு வெள்ளை நினைவுகள். சின்னம்சிறுவயதில் தோன்றிய அந்த சித்திரம். இந்திய தொலைக்காட்சி ஒன்றிலே…. நான் நினைக்கின்றேன் புட்டபத்தியிலே நடந்த ஒரு இசை வேள்வியிலே, ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருக்கின்றார். அதை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த சத்திய சாய்பாபா.. தன்னை மறந்து அந்த குரலில் குழைந்து கண்ணைமூடி, அந்த இசையாகவே மாறி இலகித்துச்சென்ற காட்சியை பார்த்தேன். இப்போதும் அந்தக்காட்சி மனதில் அப்பப்போ வந்துவிட்டுப்போகும்.
ஜேசுதாஸின் குரல் ஒரு ஸ்வரம். அது ஒரு தவம். காதுகளில் நுளைந்து இதயத்தில் மையமிட்டு, உடல் முழுவதையும் கட்டுப்படுத்திவிடும் ஒரு மந்திரமும் கூட. எந்தக்கலைஞனையும் அபரிமிதமாகப் புகழும், கலைக்கு அடிமைப்படும் தன்மை எனக்கு கிடையாது என்று நிமிர்ந்தே நின்ற என் அகராதியில், திடுக்கிட்டு நின்று குனிந்து ஒருமுறை வணக்கம் சொல்லவைத்துவிட்டவர் கே.ஜே.ஜேசுதாஸ்.
எந்தராகமாக இருந்தாலும் இருதயத்தை இடம்மாறித்துடிக்கவைக்கும் ஜேசுதாஸின் குரலில், மோகனராகமும், தோடி, கல்யாணி ராகங்களும் கேட்பது இந்த ஜென்மத்தின் பேறுகளில் ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.
புத்தகங்கள், திரைப்படச் சீ.டிக்கள், வேறு பாடல் பதிவுகள் என எதைக்கேட்டாலும் இரவல் கொடுக்க தயங்காத என் மனம், களஞ்சியமாக சேமித்து வைத்திருக்கும் ஜேசுதாஸின் கர்நாடக சங்கீத கச்சேரிகளின் தொகுப்புக்களை எவர் கேட்டாலும் கொடுக்கும் மனநிலையில் இல்லை.
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்” என்ற ஜேசுதாஸின் பாடல்தான் நான் கேட்ட முதலாவது, நான் லகித்த முதலாவது பாடல் என்பது எனக்கு திடமாகத்தெரியும். இப்போதும் என் பெரியன்னை எனக்கு இதை நினைவு படுத்திக்கொண்டே இருப்பார்.
“நீயும் பொம்மை நானும் பொம்மை” என்று தமிழ் திரையுலகத்தில் ஜேசுதாஸின் அரங்கேற்றம் 1961களில் நடந்ததாம். இந்த ஐம்பது வருடகால ஜே.சுதாஸின் பாடல்கள் அத்தனையினையும் கேட்டுவிடவேண்டும் என்ற வெறி இப்போது மனதிற்குள் புகுந்துவிட்டது.
ஆஹா… எந்தப்பாடலை மேற்கோள்காட்டி சொல்லுவேன். நீங்கள் செய்த அத்தனையும் பிடிக்கும் என்று ஒரு பேச்சுக்காக சொல்வார்களே! அப்போதெல்லாம், சிரிப்பு வந்துவிடும். ஆனால் இப்போது சிரிக்காமல் உண்மையாகச்சொல்கின்றேன் எனக்கு ஜேசுதாஸின் அத்தனை பாடல்களும் பிடிக்கும்.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டும் அல்ல. எனக்கும்
“எப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் அடைகின்றதோ, எப்போதெல்லாம் தெளிவற்ற நிலை தோன்றுகின்றதோ, எப்போதெல்லாம் துன்பங்கள் மனதை வாட்டுகின்றதோ, எப்போதெல்லாம் மனம் பேதலித்துக்கொண்டிருக்கின்றதோ
அப்போதெல்லாம் எனக்கு தேவை.. ஒரு இரவு, முழுமையான நிலா, ஒரு கட்டில், காதுகளில் ஜேசுதாஸின் பாடல்கள்.
இதோ அவர்பாடலையே அவருக்கு பரிசாகக்கொடுத்து அந்த இசையை வணங்குகின்றேன்.
7 comments:
நன்றி உங்கள் பகிர்வுக்கு!
எனக்கும் மிகவும் பிடிக்கும்! எனக்கு ஜேசுதாஸ் என்றதுமே 'பாடியழைத்தேன்', 'ஏழிசை கீதமே' தான் நினைவுக்கு வரும்..என் நினைவு தெரிந்து முதலில் கேட்ட ஜேசுதாஸ் பாடல்கள்! இன்னும் எத்தனையோ பாடல்கள்! குறிப்பாக இந்தியன்- 'பச்சைக்கிளிகள் தோளோடு'! அவரின் இசைக்கச்சேரிகள் பார்க்கப் பிடிக்கும்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆமா, வாழ்த்த எதற்கு வயது? மனசுதானே வேண்டும்? :-)
heart touchng voice alwys frm jesudas!!
Best wishes to ஜேசுதாஸ்
நல்ல பதிவு .ஆனால் தலைப்பில் தமிழ்நாட்டு அரசியல் வாடை அடிக்கிறது . ரசிக்கமுடியவில்லை
ஜேசுதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜேசுதாஸ் பிடிக்கதென்றில்லை ஆனால் என் பேவரிட் எஸ்பிபி. க்ளாசிக்கல், லைட் மியூசிக், நாட்டுப்புறப்பாட்டு, குத்துப்பாட்டு என அனைத்தையும் பாவத்தோடு பாடும் பாங்கு பாடும் நிலாவோடு ஒப்பிட்டால் ஜேசுதாசுக்கு குறைவுதான். இருவருக்குமே தமிழ் தாய்மொழியில்லை ஆனால் எஸ்பிபி அளவுக்கு தமிழை சிரத்தைஎடுத்து உச்சரிக்க கேஜேஜே முயல்வதில்லை. மற்றும்படி உங்கள் பதிவு அருமை
சிந்துபைரவி, நல்லவனுக்கு நல்லவன் பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை. நீங்கள் சொன்னது போல அமைதியான இரவுகளில் நான் கேட்பது ஏ. எம். ராஜாவும் பி பி எஸ் உம்தான்.
Taste differs
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்....
அருமை அண்ணா
Post a Comment