Saturday, January 29, 2011

பாக்கு நீரிணை சிவக்கின்றது!!

“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு!
தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.

என் சகோதரன் குருதியில் கடல் நனைந்துகொண்டிருக்கின்றது, மனம் துடித்தாலும், கண்ணீர் வந்தாலும், எழுதுவதற்கு கைகள் துடித்தாலும், எனக்குள் இருக்கின்றது பயம். (நான் இருக்கும் இடம் யாழ்ப்பாணம்).

அதிகமாக ரௌத்திரம் கொண்டதும், தேவையான நேரம் ரௌத்திரம் கொள்ளாமையும்தான் இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கும் சாபங்களுக்கான காரணங்கள்.
உணர்வுகள் இழப்புக்களைக்கூட அரசியலாக்க முண்டியடிக்கும் கூட்டங்களை, உயிர் பலிபோகும் அந்தக்கடற்பகுதிக்கே கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்.
உங்கள் அரசியல் முறையாக இருந்தால் என் சகோதரன் ஏன் நடுக்கடலில் பலியாகின்றான். உன் குரலில் சக்தியிருந்தால் ஏன் டில்லியின் இருப்பவன் குதவாயால் சிரிக்கின்றான். அரசியலுக்காய் உன்னை அடகுவை.. அதுவும் அரசியல்தான்..ஆனால் ஆறரைககோடி சமுதாயத்தை அடைவுவைக்க யார் உனக்கு அனுமதி தந்தது?

அரபிக்கடல் பக்கம் வேற்றுமானில மீனவர்கள் மீன்பிடிக்கசென்று பாகிஸ்தான் சுட்டிருந்தால் வெறும்வாய்களுக்கு அல்வாவே கிடைத்திருக்கும், சண்டைக்குக்கூட முண்டியிருப்பார்கள். இங்கே போவது தமிழன் உயிரல்லவா! அவ்வளவு கேவலம்தான்!!

இதோ ஒரு சம்பவம்.. இடம் வடபழனி. ஒரு சைவ சாப்பாட்டுக்கடை.
ஈழத்ழர்கள் நால்வர் (நான் உட்பட) சென்னை நண்பர்கள் இருவர் என ஆறுபேர் அந்த கடையில் சாப்பாட்டிற்கு ஆடர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம்.
எமக்கு முன்னமே வந்ததனால் அப்பளம், பாயசம் என்பவற்றையும் வைத்திருந்தார்கள். இரண்டு ஹிந்தி வாலாக்கள் எமக்கு அருகில் வந்திருந்து, தமக்கு ஹிந்தியிலேயே ஆடர் பண்ணி சாப்பாடு கேட்டார்கள்.

அப்பளம் முடிந்திருக்கவேண்டும் அவர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. எம்மையும் எங்கள் சாப்பாட்டையும் பார்த்த அவர்கள், ஏதோ ஹிந்தியால் கத்திவிட்டு, F.....தமிழ் பிளடி என்று அந்த சர்வரை அடிக்கப்போனார்கள்.
எங்களுக்கு சுர்… என்று ஏறிவிட்டது. திடீர் என நாங்கள் எழுந்து சர்வரை விலக்கிவிட்டு, எம்முடன் வந்த நண்பன் அவர்களுடன் ஆங்கிலத்தில் காரசாரமாக ஏசினான்…
“எப்படி நீ..சொல்வாய் F..... தமிழ் பிளடி என்று! உன்ட மாநிலத்தில வந்து ஒரு தமிழன் குரல் உயர்த்தி கதைக்கவே முடியாது இங்க வந்து அந்தளவுக்கு உனக்கு தைரியமா! தமிழ் பிளடிதானே! எங்கே இப்போ கையை வை.. என்றான்.
நாங்கள் அங்கே காரசாரமாக வாதிட்டோம்.

அந்த சர்வரிடம் மன்னிப்பு கேட்காமல் நீங்கள் இங்கிருந்து போகமுடியாது என்றோம். இறுதியில் அவர்கள் பணிந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர்.
என்ன கொடுமை என்றால் எங்களுக்கு வந்த வந்தரோசம், ரௌத்திரம் சுற்றிவர இருந்து சாப்பாட்டை கட்டிக்கொண்டிருந்த எந்த தமிழனுக்கு வரவில்லை. ஏன் என்றுகூட கேட்கவில்லை.
இதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த கடையின் முதலாளி..அவர்கள் சென்றவுடன்… ஏன் சார்..கேவலம் ஒரு சர்வருக்காக அவங்களுடன் சண்டைபோடுறீங்க என்றார்!

ரௌத்திரம் கொள்!!! என்று ஒருவர் இப்படி எல்லாம் எம் தமிழ்சமுகம் கண்டவன் வந்தவன் எல்லாம் அடித்துவிட்டப்போகும் கோவில் மணி ஆகிவிடுவான் என்று எண்ணித்தான் சொல்லிவச்சாரோ என்னமோ!

எனவே இன்றுவரை தொடர்கதையாக 500 மேலான எம் சகோதர்கள் பிழைப்புக்காக கடலேறி, சட்டவிரோதமான முறையில் உயிர் பலியெடுக்கப்படுகின்றார்கள். இந்த சம்பவம் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும்.
இன்னும் கடந்து இது ஒரு தொடர்கதையாக செல்லக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் வலையங்களில் சுதந்திரமான தொழில்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், அது வழங்கப்படமாட்டாது!! எனவே வழங்கப்படபண்ணவேண்டும்.
ஆம்..ரௌத்திரம் கொள்!!!

18 comments:

சக்தி கல்வி மையம் said...

எனவே இன்றுவரை தொடர்கதையாக 500 மேலான எம் சகோதர்கள் பிழைப்புக்காக கடலேறி, சட்டவிரோதமான முறையில் உயிர் பலியெடுக்கப்படுகின்றார்கள். இந்த சம்பவம் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும்.
இன்னும் கடந்து இது ஒரு தொடர்கதையாக செல்லக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் வலையங்களில் சுதந்திரமான தொழில்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், அது வழங்கப்படமாட்டாது!! எனவே வழங்கப்படபண்ணவேண்டும்.
ஆம்..ரௌத்திரம் கொள்!!!///
போராடுவோம்..

ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman///

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

சக்தி கல்வி மையம் said...

indli????

Unknown said...

என்னத்த சொல்ல?அந்தப் பெரிய இந்தியாவே மவுனித்திருக்க..

MANO நாஞ்சில் மனோ said...

//ஆம்..ரௌத்திரம் கொள்!!!//
கொள்வோம்....

Unknown said...

இப்படி ஒற்றை ஒற்றையாக வருகிற ஏழை மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் என்பது ஒருபுறம் ஜனா... பெரிய ரோலர்களில் எல்லை கடந்துவந்து இலங்கை மீனவர்கள் (எனக்குத் தெரிந்து பருத்தித்துறை, இன்பருட்டி மற்றும் மன்னார் பக்கத்து மீனவர்கள்) மீது அராஜகமாகத்தாக்கி மீன்பிடியில் ஈடுபடுகிற கூட்டம் எந்தப் பாதிப்பும் இல்லாமல் போய்விடுகிறது. அதிநவீன மீன்பிடி உபகரணங்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது இலங்கைக் கரையோரக் கடல்வளமும் மீனவர் வாழ்வும். இப்படியான corporate கொள்ளையர்களைக் கண்டுகொள்ளாமல் அன்றாடங்காய்ச்சிகளைக் கொன்றுகுவிப்பதுதான் ‘சனநாயகச் சோசலிசக் குடியரசு’. அதற்கு முழுஆதரவையும் உபகண்டத்து அரசு வழங்கிக்கொண்டே இருக்கும். நாசமாய்ப்போக

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதிகமாக ரௌத்திரம் கொண்டதும், தேவையான நேரம் ரௌத்திரம் கொள்ளாமையும்தான் இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கும் சாபங்களுக்கான காரணங்கள்.//

சரியாச் சொன்னீங்க ஜனா! எம் எல்லோரினதும் குரல் கண்டிப்பாக ஒரு மாறுதலைக் கொண்டு வரும் என்று நம்பலாம்!

Anonymous said...

ஈழத்தமிழர்களுக்கு ஒன்றென்றால் முத்தக்குமரன் உட்பட 11பேர் தீக்கிரையானார்களே! இந்தியத்தமிழனுக்கு ஒன்றென்றால் அவர்கள் ஒரு குரலாவது கொடுப்பார்களா? என்று ஒருமுறை கேள்வி எழுப்பிய ஒரு சில "ராம்" போன்ற இந்திய ஜனநாயக வாதிகளுக்கு (நாங்கள் ஒருபோதும் பிரித்து பார்ப்பது கிடையாது. தமிழன் எங்கும் தமிழன்தான்)
வலையுலகில் நீங்கள் சரியான பதிலை சொல்லியுள்ளீர்கள்.
சினிமாவுடனும், நடிகைகளின் அங்ககங்களுடனும் பலர் பதிவிட்டுவருகையில் முக்கியமான பிரச்சினை ஒன்றை ஈழத்தில் இருந்து உணர்வுடன் தமிழன் எங்கும் தமிழன்தான்..அந்த வலி அனைவருக்கும் இருக்கும் என்ற தங்கள் உணர்வான பதிவு பாராட்டப்படவேண்டியதே.

டிலான் said...

அண்ணை..ஒரு தமிழனாக இருந்துகொண்டு எம் சகோதரர்கள் பலி கொள்ளப்படுவதை கண்டு சம்மா இருக்கமுடியாது.
இலங்கைப்பதிவராக உங்கள் கருத்து வரவேற்கப்படவேண்டிய விடயமே.
அந்த வடபழனி சம்பவம் எனக்கு இன்றும் இரத்தம் கொதிக்கும் சம்பவம். உங்கள் ரௌத்திரத்தை நேரடியாக கண்டேன்.
"அண்ணா ஒன்றை கவித்தீங்களா? யாரோ மிக தமிழ் உணர்வாளர் ஒருவர் இந்தப்பதிவுக்கு மையனஸ் ஓட்டு போட்டிருக்கின்றார். வாழ்க தமிழின உணர்வு.

தமிழ் உதயம் said...

ரௌத்திரம் கொள்வோம். ஒவ்வொரு தமிழனும் தன்னிலிருந்து இதை ஆரம்பிக்கட்டும்.

Jana said...

நன்றி நண்பர்களே. எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் இதற்கு நன்றிகள் பாராட்டுக்கள் தேவையில்லை. இந்த கோர நிகழ்வுகள் தொடராமல் இருக்க நம்மாலான பங்களிப்பே தேவை. எனவே அனைவரும் தங்களான பங்களிப்பை வழங்க தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அத்துடன் இலங்கையில் இருந்து நான் மட்டும் அல்ல இது தொடர்பாக நண்பர் மதி.சுதா அவர்கள் மன்னரே எழுதிய பதிவையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.


இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??
http://mathisutha.blogspot.com/2010/11/blog-post_25.html

தர்ஷன் said...

நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே எனது ஆழமான கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
இன்று தமிழர் மத்தியில் மூண்டிருக்கும் இத்தீக்கனல் அணையாதிருக்கட்டும்

Unknown said...

வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

pichaikaaran said...

உணர்வு பூர்வமான இடுகை

ம.தி.சுதா said...

அண்ணா நாம் எப்போதும் திருந்தப்போவதில்லை... அப்படித் திருந்த யோசித்தாலும் அருகிலுள்ள மேதாவிகள் விடப்போவதுமில்லை... அந்த நாடு இந்த நாடு என என் நாம் பிரித்து பார்க்கணும் இந்த விடயத்தில் தமிழன் என்று சிந்திப்போம்...

இத்தனை கண்டும் தமிழ்நாட்டு அதிகார வர்க்கம் சத்தமில்லாமல் இருக்குமானால் அவர்களின் கையாலாகாத் தனம் வெளிச்சப்படுத்தப்படும்...

(அவர் அழும் கண்ணீர் கறுப்புக் கண்ணாடியை கடந்தால் தானே வெளிக்குத் தெரியும்)

வந்தியத்தேவன் said...

இப்போதாவது தமிழகத்தில் சில இளைஞர்கள் விழித்துக்கொண்டார்களே.. திருட்டுப் பயல் கருணாநிதி என்றைக்கு ஒழிகின்றானோ அன்றைக்குத் தான் தமிழர்களுக்கு (இந்திய) விடிவுகாலம் பிறக்கும்.

நிரூஜா said...

:|

test said...

இப்போதாவது ரௌத்திரம் கொள்வோம்!

KANA VARO said...

என் சகோதரன் குருதியில் கடல் நனைந்துகொண்டிருக்கின்றது, மனம் துடித்தாலும், கண்ணீர் வந்தாலும், எழுதுவதற்கு கைகள் துடித்தாலும், எனக்குள் இருக்கின்றது பயம்.///

LinkWithin

Related Posts with Thumbnails