ஒரு பெருந்திருவிழா நடந்து கலைந்துவிட்ட நிலம்போல திமோத்தியின் மனம் வெறித்துப்போய்க்கிடந்தது. இன்றைய பொழுதுகளின் நடிப்பு கலைகளை இவர்கள் தெளிந்துதான் நடிக்கின்றார்களா? என்னைப்போல் எத்தனை திறமையானவர்கள் வெளியில் நிற்கின்றோமே? காலமும், நேரமும் எங்கள் பக்கம் திரும்பாமல், அரைகுறைத்திறமைகள் பக்கமே சாருகின்றனவே இது ஏன்?
ஒருவனின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்காமை என்பது, வாழ்வின் எத்தனை கொடிய துயரம் என்பதை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக திமோத்தி அனுபவித்துவருகின்றான். ஒரு நடிப்பு திறமை உடையவன் மட்டும் அன்றி, நாடக கலை பற்றிய அறிவினையும் முழுமையாக கற்றிருந்தான். கிரேக்க நாடகங்களில் இருந்து, நவீன நாடகங்கள்வரை அத்தனை தகவல்களையும் விரல்நுனிகளில் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.
ஒரு நாடகத்தின் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடித்துவிடவேண்டும் என்ற துடிப்புடன், மோஸ்கோ நகரமெங்கும் எத்தனை நாடக அரங்குகளில் நேரம்காலம் பார்க்காமல் அவன் தவங்கிடந்திருக்கின்றான். எத்தனை பிரபல நடிகர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏதாவது ஒரு நடிப்பு சந்தர்ப்பத்திற்காக ஒரு தவம்போல் காத்திருந்திருக்கின்றான். ஆனால் இத்தனைபேரும் அவன் திறமைகளை கண்டு ஒருமுறையாவது திடுக்கிடாமல் இருந்தது கிடையாது. தனக்கான அங்கீகாரம் கேட்டுச்சென்றவர்கள் ஒவ்வொருவரிடமும் தன் திறமைகளை மடைபோல திறந்துவிட்டு வியக்கப்பண்ணியிருக்கின்றான்.
ஆனால் அவனைக்கண்டு வியந்தவர்கள் அத்தனைபேருக்கும் ஏன் அவனது திறமைகளை அங்கீகரிக்க எண்ணம் வரவில்லை என்பது பெரும் ஆச்சரியமே!
அவனை புறக்கணித்தவர்கள் சிலர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு சந்தர்ப்பம் தருவதாக சொல்லி அவனை அலைக்கழித்து ஏமாற்றியவர்கள் நிறையப்பேர். தன் திறமைகளுக்கான அங்கீகாரத்தை வழங்காதவர்கள் மீது அவனுக்கு எப்போதும் கோபம் வருவதில்லை. காரணம் என்றாவது திறமைகள் நிரூபிக்கப்பட ஏதாவது ஒரு வாசல் வெளிச்சம் தெரியத்தான் போகின்றது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்தான் அவன். ஆனால் தனக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தவர்கள்மீதுதான் அவன் கடும் கோபம் கொண்டிருந்தான்.
இருந்தாலும், அவனின் இயலாமை, சில வேளைகளில் தலைதூக்கிவிடும் சுயவெறுப்புக்களால் இந்தக்கோபங்கள் அர்த்தமற்றதாகிவிடுவது அதிசயமில்லையே?
இராக்காலங்கள் அவனுக்கு சுகமானது. ஏனென்றால் இராக்காலங்களில் வரும் கனாக்களில் அவன் எத்தனை வேடங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றான்.
“டோல்ஹவுஸ”; நாடகத்தில், நோராவின் குடும்ப நண்பனாக, “சோர்க் சேர்க்கிள்” நாடகத்தின் வில்லனாக, “வன்ஸ போனர் டைம் இன் ரஷ்யா” நாடகத்தில் மீரோத்தாக என அத்தனை நாடகங்களிலும் கனவு என்றாலும் அர்ப்பணிப்புடன் நடித்து மனம் மகிழ்ந்திருக்கின்றான் திமோத்தி.
கனவுகள் தவிர்ந்து திமோத்தியின் நடிப்பை அங்கீகரித்து, அவனது நடிப்பின் முதல் இரசிகையாக இருப்பவள் கிளேரா. திமோத்தியை விட அவனின் அதி அற்புத நடிப்பு திறமைமேல் அதீத நம்பிக்கை உடையவள் கிளேரா. வெளிப்படையாகவே திமோத்தியை காதலிப்பவள். ஆனால் தன் முதல் காதலி, தன் உயிர் அத்தனையும் நடிப்புத்தான், தான் ஒரு நடிகன் என்பதை இந்த மோஸ்கோ நகருக்கு மட்டும் அன்றி கிளேராவுக்கும் நிரூபித்து காட்டிவிட்டே கிளேராவை ஏற்றுக்கொள்வது என்ற உறுதியுடன் இருந்தான் திமோத்தி.
நாளுக்கு நாள், திமோத்தியின் நடிப்பு ஆசை, வெறியாகிக்கொண்டு செல்வதையும்,
ஒவ்வொரு தோல்வியும் அவன் மனத்தை பெருமளவில் தாக்குவதையும் கிளேரா கவனிக்கத்தவறவில்லை.
சில நாட்களின் பின்னர் மோஸ்கோ நகருக்கு நாடகம் போட, ஒரு பிரஞ்சு நாடக குழுவொன்று வந்திருப்பதை அறிகின்றாள் கிளேரா. நேரடியாகவே அங்கு சென்று அந்த நாடகக்குழுவின் தலைவரிடம் திமோத்தி பற்றி கூறுகின்றாள். அவன் திறமைகளுக்கு நீங்களாவது ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கதறுகின்றாள்.
இதோ… திமோத்தி அந்தக்குழுவினரால் அழைக்கப்படுகின்றான். அவன் திறமைகள் ஒத்திகை பார்க்கப்படுகின்றது. அவனுக்குள் இருந்து வெளிப்பட்ட நடிப்பு ஒளியை கண்டு அவர்கள் கண்கள் கூசிக்கொண்டன. ஏதோ ஒரு பாத்திரத்திற்காக அழைக்கப்பட்ட அவன் அந்த நாடகத்தின் கதாநாயகன் ஆகின்றான்.
“பாரிஸ் லவ்” என்ற அந்த நாடகத்தில் சாம்ஷன் என்ற கதாநாயகப் பாத்திரம் திமோத்திக்கு.
சாம்ஷன் - பிரைனா, இருவரும் காதலர்கள், சாம்ஷன் ஒரு இருதயநோயாளி, நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த அவன் சில சூழ்ச்சிகளால் ஏழையாக்கப்படுகின்றான். ஆனால் மீண்டும் தன் முன்னையோரின், வரலாறு அழிக்கப்படாது இருக்க ஆக்ரோசமாக போரடுகின்றான். ஒரு இக்கட்டு நிலையில் அவன் தப்புவதற்காக பிரைனா தியாகம் செய்கின்றான். இறுதியில் தன் இலட்சியத்தை அடைந்து, சாதித்துவிட்ட உட்சாகத்திலும், தனது காதலியின் தியாகத்தின் சோகத்திலும் இருதய நோய் உச்சமாக சரிந்து இறந்துவிடுகின்றான்.
இதோ…நாடகம் தொடங்க இன்னும் கொஞ்சநேரம்தான் இருக்கின்றது. வேடமிடும் அறையில் இருந்து எழுந்துவந்து அரங்கின் மறைவாக நின்று மண்டபம் நிறைந்த கூட்டத்தை பார்த்து கண்ணீர் சொரிகின்றான் திமோத்தி.
அவன் கண்கள் கிளேராவை தேடுகின்றன. அவள் அங்கே இல்லை. வாழ்வின் தோல்விகளில் தன்னை தோழில் ஏந்திய அவள், வெற்றியின் பொழுதுகளில் பக்கத்தில் இல்லையே என ஏங்கினான்.
இதோ அரங்க பார்வையாளர்களின் பின்புறமாக இருந்து, காவலர்கள் புடைசூழ விலங்கிட்டு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு, முன் இருக்கையில் அமரவைக்கப்படுகின்றாள் கிளேரா.
புதிராகவும், மனதில் பாரத்துடனும் மறைவில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைகின்றான் திமோத்தி.
நாடகக்குழுவின் தலைவன் தவிர்க்கமுடியாத வகையில் ஒரு கொலை செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், என்ன செய்வது என்று அவன் தவித்தநேரத்தில், கிளேரா வந்து திமோத்திக்காக சந்தர்ப்பம் கேட்டதும், அந்த சந்தர்ப்பத்தை நாடகக்குழுத்தலைவன் இப்படி சந்தர்ப்பம் ஆக்கியமை பற்றி பிற கலைஞர்களால் திமோத்திக்கு புரியவைக்கப்படுகின்றது.
இதோ…திரைவிலகுகின்றது…. காட்சியில் திமோத்தி…புகுந்து அசத்திக்கொண்டிருந்தான். முகபாவங்களாலும், உடல் இலாவகங்களாலும், குரல் ஏற்றத்தாழ்வுகளாலும், பார்வையாளர்களை இருக்கைகளின் நுனிக்கு கொண்டுவந்தான்.
இதோ நாடகத்தின் இறுதிக்கட்டம்…அரங்கமே..பரபரப்பாக..திமோத்தியில் இலகித்துக்கொண்டிருந்தது. கிளேரா ஆழமாக திமோத்தியை கவனித்தாள்…
அவன் முகபாவத்தில் அப்படி ஒரு…அற்புதம், அவள் இதுவரை பார்த்திராத மாற்றம். முகத்தின் இரசப்பிடிப்பில் அத்தனை தீவிரம்.
“கிளேரா…நடிப்பு ஒரு தவம்… ஒரு பாத்திரத்தின் நான் என்பதைவிட பாத்திரமே நானாகி விடுவது எத்தனை பேரின்பம் தெரியுமா? அதை உணர்ந்தவர்களை நான் காணவில்லை. ஆனால் நடிப்பின் இத்தனை நாள் தவம் எனக்கு அதனை தந்துள்ளது. அது விபரிக்கமுடியாத உணர்வு. கதையில் அந்த பாத்திரம் என்ன எழுதப்பட்டதோ அவற்றை முறையாக இயல்பாக அதே இயற்கையுடன், துளி நடிப்பு இன்றி, மிக இயல்பாக… அதுவே ஆகி..அதாகவே இலகிப்பது..அதுவே நடிப்பு. என்று அதிசயத்துடன் அவன் ஒருநாள் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
புரிந்துகொண்டாள்…இப்போது அங்கே திமோத்தி.. இல்லை. முற்றிலுமாக சாம்ஷன்தான். கதையின் போக்கு அவளுக்கு தெரிந்திருந்தபடியாலும், நாடகத்தின் இறுதிக்கட்டங்கள் நெருங்கிவிட்டிருந்ததாலும்; பெரும் கலவரமடைந்தாள்.
இதோ இறுதி…சாம்ஷன் இறக்கும் தருணம்…
அரங்கமே அமைதியாக கண்களில் கண்ணீருடன், திமோத்தியை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. மேடையை நோக்கி ஓலமிட்டபடியே… ஓட எத்தனிக்கின்றாள் கிளேரா. காவலர்கள் தடுகின்றனர்.
இதோ நாடகத்தில் சாம்ஷன், சாதித்த மகிழ்ச்சியையும், திடீர் என்று தன் காதலியின் தியாகத்தையும் முகபாவத்தில் காட்டி, இருதயநோவால் துவண்டு விழும் காட்சி…
திமோத்தி…அப்படியே சரிகின்றான்.
அவன் வாயில் இருந்து இரத்தம் கொப்பளிக்கின்றது. சக கலைஞர்கள் திமோத்தி! திமோத்தி!! ஏன்று அலறுகின்றனர். எந்த சலனமும் இல்லை.
சாம்ஷன்…. என்று பேரிடிபோல அலறினாள் கிளேரா… சாதித்த புன்னகையுடன் அவளை பார்த்துவிட்டு, பின்னர் ஒரு நன்றிப்பார்வையை அவளுக்கு வழங்கிவிட்டு, மரணிக்கின்றான் திமோத்தி.
12 comments:
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
////அதீத நம்பிக்கை உடையவள் கிளேரா. வெளிப்படையாகவே திமோத்தியை காதலிப்பவள்./////
அழுத்தமாக இருக்கிறது அண்ணா.. கதையின் ஓட்டமும் தங்களது மொழியாக்கல் திறனும் எமது சமூக நினைவையே பிரதிபலிக்கிறது...
அண்ணா இது மிக ஆழமான கதை உண்மையாகவெ கிளேரா கொலை செய்துள்ளாளா ? அது எனக்கு சந்தேகமே... அது ஒரு பக்கமிருக்க திமோத்தி சாகவில்லை அங்கே சாம்ஸன் தான் இறக்கிறான் ஆனால் அவனை சாம்ஸனாக மாற்றியது நாடகக்குழு தலைவன் (கிளேரா எனவும் கொள்ளலாம்) ஆனால் அவளும் சாம்சன் செத்ததாக நினைப்பது தான் ரசனையின் உச்சக்கட்டம்...
அருமையாக மொழி பெயர்த்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
கிளேவின் தியாகமும், திமோத்தியின் பாத்திரமாகவே மாறிவிடும் நடிப்பும், சோக முடிவுமாகக் கனக்கச் செய்கிறது கதை
மீண்டும் மீண்டும் முத்திரையை பதிக்கிறீர்கள் அண்ணா!
Nice! :-)
Dostoevsky?
அருமையான கதை. அதைவிட அருமை, உங்களது விவரணம்.
ம்..கனமான கதை...
சீரான மொழியோட்டம். அனுபவித்து வாசித்தேன்.
ஜீ... said...
Nice! :-)
Dostoevsky?
தங்கள் தேடல் அறிவு அதிசயிக்க வைக்கின்றது ஜீ..அண்ணாத்தை. அருமை.
Post a Comment