Monday, July 27, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -03)


ஓர் ஒஸ்ரிய இளவரசன், ஒரு செர்பிய இளைஞனால் ஆற்றங்கரை ஒன்றில்வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டான். அதையடுத்து ஒஸ்ரியா, ஜெர்மனியின் உதவியுடன் செர்பியா மீது போர்தொடுத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யா வந்தது. 1914, ஜூலை 28 இல் அந்த யுத்தம் ஆரம்பமானது. ஜெர்மனியின்மீது பெரும் கோபத்துடன் இருந்த பிரான்ஸ் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஜெர்மனியை எதிர்த்தது. இந்த நிலையில் ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி தனது படைகளை நகர்த்தியது. பெல்ஜியம் அப்போது நடுநிலமை வகித்துவந்த நாடு, எனவே ஜெர்மனி செய்தது மகாதவறு எனத்தெரிவித்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனும் போரில் குதித்தது. ஜப்பானும் பிரிட்டனோடு சேர்ந்துகொண்டது. சீனாவும் தன் பங்கிற்கு பிரிட்டனை ஆதரித்தது. அனால் பல்கேரியா ஜெர்மனிக்கு அதரவாக செயற்பட்டது. இவ்வாறு தான் முதலாம் உலக மகா யுத்தம் தொடங்கியது. இந்த நிலையில் அப்போது பலஸ்தீனத்தை அண்டுகொண்டிருந்த துருக்கி ஜெர்மனியின் அணியிலேயே இருந்தது.

இந்தக்கட்டத்தில் யூதர்கள் என்ன செய்தார்கள்? தமது இனத்தின் இலட்சியம் ஒன்றுக்காக எந்த இனமும், செய்யாத காரியத்தைக்கூட செய்யத்தயாரானார்கள். யூதர்கள் பல நாடுகளில் வாழ்ந்துவந்தாலும் அவர்கள் தாம் யூதர்கள் என்ற அடையாளத்தினை ஒருபோதும் இழக்காதவர்கள். இந்த நிலையில் முதலாம் உலகப்போரின்போது, தாம் வசிக்கும் நாடுகள் என்ன நிலைகளை எடுத்திருக்கின்றனவோ அந்த நிலையை ஆதரித்தார்கள். அந்த நாடுகளின் படைகளோடு சேர்ந்து போரிட்டார்கள். ஓர் அணியில் இருந்த யூதப்படையினர், எதிரணியில் இருந்த யூதர்களுடன் மோதவேண்டிய இக்கட்டான ஒரு வரலாற்று நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். முதன்முதலாக ஒரு யூதனை இன்னும் ஒரு யூதன் கொல்லவேண்டிய நிலை வந்தது. ஆனால் அவர்கள் அதையும் செய்தார்கள்.
காரணம், யுத்தத்தில் ஏதோ ஒரு அணி ஜெயிக்கப்போகின்றது. அந்த அணி வெற்றிபெற்றமைக்கு காரணமாக இந்த யூதர்களைப்பற்றி அவர்கள் கண்டிப்பாக நினைத்துப்பார்ப்பார்கள். யூதர்களுக்கு அதற்கான வெகுமதியாக பலஸ்தீனத்தில் தனிநாடு ஒன்றை அமைத்துக்கொடுக்கவேண்டும் என நினைப்பார்கள், அப்படியாவது நாம் எம் இனத்திற்கான ஒரு நாட்டினை அடைந்துவிடலாமே என்பதற்காகத்தான்.
முதலாம் உலகப்போரில் உலகம் முழுவதும் யூதர்கள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு, வலையமைப்புக்களை அவர்கள் பலப்படுத்தியிருந்தபோதிலும் கூட, யூதர்களுடன் யூதர்கள் மோதலுக்கும் அவர்கள் தயாரானது அவர்களின் இலட்சியத்தின் நோக்கத்திற்காகவே.
முதலாம் உலகப்போரில் பண உதவிகள். ஆயுத வடிவமைப்பு, பெருந்தொiகையான படை அணிகள், மருத்துவம், விஷவாயுக்கள் தயாரிப்பு என சகலத்திலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. முதலாம் உலகப்போரில் யூதர்கள் நிறைந்திருந்தார்கள்.
எனினும் அந்த யூதர்கள் அனைவரினதும் கனவு இஸ்ரேல் என்ற யூதர்களுக்கேயான தேசம் மட்டுமே.


போரின் முடிவில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையினை பார்த்தால் பலத்த அதிர்ச்சி ஏற்படும். ஒரு இலட்சம் ரஷ்ய யூதர்கள், நாற்பதாயிரம் ஒஸ்ரிய யூதர்கள், பன்னிரெண்டாயிரம் ஜெர்மனிய யூதர்கள், ஒன்பதாயிரம் பிரான்ஸ் யூதர்கள், ஒன்பதாயிரம் பிரித்தானிய யூதர்கள் என்ற தொகையில் மடிந்திருந்தனர்.
போர் முடிவுறப்போகும் சமயத்தில் பிரிட்டனின் கையோங்குவதை யூதர்கள் கணித்து. பிரிட்டனில் உள்ள யூதர்களை இந்தச்சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்தும்படி கோரிக்கை வைத்தனர்.
அதன்பிரகாரம், பிரிட்டனில் உள்ள யூதர்களின் பிரதிநிதிகள் உடனடியாக பிரித்தானிய அதிகாரிகளின் உறவுகளை மேலும் சுமுகமாக்கிக்கொண்டு யூத இனம் பிரித்தானியாவுக்காக என்னவெல்லாம் செய்தது, எதிர்வரும் காலங்களிலும் பிரிட்டனுக்காக என்னவெல்லாம் செய்யவுள்ளோம் என பெரிய பட்டியல்களையே பெரும் அறிக்கையாக சமர்ப்பித்தார்கள். இதற்கெல்லாம் பிரதிபலனாக தமது தாயக தேசத்தின் தனிநாட்டு கோரிக்கையினை மிக அழுத்தமாக தெரிவித்தனர். இதன் பலனாக பிரிட்டனுடன் யூதர்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் பல கட்டப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
யூதர்களின் கோரிக்கை பிரிட்டனுக்கும் நியாயமாகத்தான் பட்டது. காரணம் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், என்ற மூன்று வல்லாதிக்க தேசங்களை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு அமெரிக்கா வல்லரசாகிவிடுமோ என்ற பயம் அதற்கு இருந்தது. இந்த நிலையில் யூதர்களுக்குரிய நாடு ஒன்றை உருவாக்கிக்கொடுத்தால் பின்நாளில் தனக்கு மத்தியகிழக்கு நாடுகளில் ஒரு வலுவான அதரவு கிடைக்கும் என்று மனக்கணக்கு போட்டது.
இதற்கு பிரித்தானியாவாழ் யூதர்கள் தொடர்ந்தும் தூபம் போட்டுக்கொண்டே இருந்தார்கள். பிரிட்டனும் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியவண்ணமே இருந்து.
ஒரு பிரகடனம் வழியாக அதற்கும் பலன் கிடைத்தது. அந்தப்பிரகடனத்தின் பேரே பல்ஃபர் பிரகடனமாகும்.


1917 டிசெம்பர் 9ஆம் திகதி பிரிட்டன் அலன்பே என்ற தளபதியின் தலைமையில் தன் படைகளை ஜெருசலேமுக்கு அனுப்பியது. இன்னொருபுறம் சிரியாவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. கண நேரத்தில் பலஸ்தீன் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டினுள்ளும், சிரியா பிரஞ்சுக் கொலனியாகவும் மாறின.
அப்போதைய இங்கிலாந்தின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்த பல்ஃபர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்றினை உருவாக்கவேண்டும், இதன்போது பலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது என அந்த அறிக்கை தெரிவித்தது.
பாஸ்போட், விசா என்று எந்தக்குறுக்கீடுகளும் இல்லாமல், யூதனா? உள்ளே வா! என்று ஏஜென்டுகள் எல்லா இடங்களிலிருந்து வந்து பலஸ்தீன எல்லையோரம் காத்திருக்கும் யூதர்களை ஏஜென்டுகள் கும்பல் கும்பலாக அழைத்துச்சென்றனர். யூதக்குடியிருப்புக்கள் மேலும் ஏற்படுத்தப்பட்டன. யூத வங்கிகள் மூலம் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த நிலங்களிலும் குடியேற்றப்பட்டனர், அத்தோடு சில யூதர்கள் தாங்களாகவே நிலங்களை வாங்கி தம் மனைகளை அமைத்துக்கொண்டனர்.

1922 ஜூனில் பலஸ்தீன ஆட்சி அதிகாரம் தொடர்பான இறுதித்திட்ட வரைபு, தேசங்களின் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டது. பலஸ்தீனத்தினுள் ஒரு யூத தேசத்தை நிறுவுவது, மற்ற மக்களின் சிவில், மத உரிமைகளை பாதுகாப்பது, என்ற பிரிட்டனின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட அந்த இறுதித்திட்டவரைபு, யூதர்களுக்கு ஒரு சதவிகிதம் கூட பாதகமாக அமைந்துவிடக்கூடாது, அவர்களின் உரிமைகளை பெறுவதிலோ, வாழ்வதிலோ எந்தவித சிறு இடையூறும் வந்துவிடக்கூடாது எனத் தெளிவாக இருந்தது. மீண்டும் எமது தாயகத்தை, நமது பூமியாக்கிவிட்டோம், இஸ்ரேல் என்றதொரு யூத தேசம் மலரப்போகின்றது. இன்னும் தேவ தூதர்கள் வரவேண்டியது ஒன்றுதான் பாக்கி. வந்துவிட்டால் சொலமன் தேவாலயத்தையும் புதிதாக கட்டிவிடலாம். இப்படித்தான் உலக யூதர்கள் அனைவரும் கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.
எந்த நூற்றாண்டிலும், எல்லா நேரத்திலும், அதிஸ்டக்காற்று யூதர்களின் பக்கம் தொடர்ந்து வீசியதே இல்லை. ஐரோப்பிய யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி வருவதை தடுத்து நிறுத்த ஒரு சக்தி வந்தது. ஐரோப்பாவைத் தான் ஆளவேண்டும். அந்த ஆளுகைக்குக் கீழ் யூதர்கள் என்போர் வாழ்ந்தற்கான தடயங்களே இன்றி அழிந்துபோகவேணடும். இந்த இரண்டும் தான் அந்த சக்தியின் வாழ்நாள் இலட்சியமாகவே இருந்தது…ஆம் அந்த சக்திதான் ஹிட்லர்.


ஜெர்மனிக்கும் யூதர்களுக்கும் சுமார் 1600 ஆண்டுகால உறவுகள் இருந்தன. அதாவது பிற ஐரோப்பிய நாடுகளைப்போல யூதர்கள் ஜெர்மனியிலும் தஞ்சம்பெற்று வாழ்ந்துவந்தார்கள். சில விசயங்களை துல்லியமாக எடுத்துரைக்க வார்த்தைகள் கிடையாது என்பார்கள். அப்படிப்பட்ட விடயங்கள்தான் யூதர்கள் மீது ஹிட்லரின் நாஜிப்படைகள் கொண்டிருந்த வெறுப்பு.
1933, ஜனவரி 30, அதாவது இரண்டாம் உலகமகா யுத்தம் தொடங்குவதந்கு ஆறு ஆண்டுகள் முன்னர் ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியை கைப்பற்றினார்.
யூதர்களின் குழந்தைகளுடன் ஜெர்மனியக்குழந்தைகள் பள்ளியில் ஒன்றாக உட்காரக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார். யூதர்களைத்தொடாதே, அவர்களின் உடலில் ஓடுவது கெட்ட இரத்தம்! இந்த ரீதியில்த்தான் ஜெர்மனியக்குழந்தைகளின் மனங்களில் யூத எதிர்ப்புக்கள் விதைக்கப்பட்டன.
சில நாட்களிலேயே யூதக்குழந்தைகள் பள்ளிகளில் சென்று படிக்கத்தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத்தடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என தொடரத்தொங்கின. ஒவ்வொரு அலுவலகங்களில் இருந்தும் யூதர்கள் பணி நிக்கம் செய்யப்பட்டார்கள்.
1935 இல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் “நியூரம்பெர்க் சட்டங்கள்” என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்த யூதர்களை அபாண்டமாக ஒடுக்குவதற்கு இயற்றப்பட்ட சட்டத்தில் ஹிட்லரே கையொப்பமிட்டார்.


யூதர்களை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள், விசாரணைகளை நடத்துங்கள். அதிலும் திருப்தி இல்லையா, கொன்று விடுங்கள். இதற்கு யோசிக்கவேண்டாம், யூதர்களை கொல்வதே எமது கடமை, ஹிட்டரின் குட்டி மீசைக்கு கீழிருந்த உதடுகளில் இருந்து அனல்கொட்டும் வார்த்தைகள் உத்தரவுகளாக வந்துவிழுந்துகொண்டிருந்தன.
ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுக்கவேண்டும், ஹிட்லரின் யூத எதிர்ப்பிற்கான காரணம் என்ன? இதுகுறித்து பக்கம் பக்கமாக விபரித்து எழுத எந்த விளக்கங்களும் இல்லை. ஹிட்லரைப்பொறுத்தவரையில் ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் ஆரியர்களிடம் அடிமைப்பட்டு சாகவே பிறந்தவர்கள். இங்கே அவர்களின் எண்ணப்படி ஆரியர்கள் என்பவர்கள் ஜெர்மனியர்கள், மற்றவர்கள் என்றால் யூதர்கள்.
தான் ஆட்சிக்கு வருவதற்கு பத்து பதினைந்து அண்டுகளுக்கு முன்னதாகவே, ஹிட்லர் தான் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தீவிரமாக திட்டமிட்டு வைத்திருந்தார். பதவியேற்றதும் ஒவ்வொன்றாக செயற்படுத்தத்தொடங்கினார்.
“ஹிட் லிஸ்ட்” தயார் செய்து யூதர்களை அழிப்பதற்கெனறே, ஹிட்லர் இரண்டு படைகளை உருவாக்கினார். “ஹெஸ்ரபோ” என்ற இரகசிய காவற்படை, எஸ்.எஸ்.என்ற கறுப்பு உடை தரித்த பாதுகாப்பு படை.


அன்று ஜெர்மனியில் வசித்துவந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 இலட்சம். ஹிட்லர் பதவிக்கு வந்து ஐம்பத்தி ஏழாவது நாள், யூதர்களின் நிரந்தர எமகண்டம் தொடங்கியது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு யூதர்களையாவது கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டு தமது துப்பாக்கிகளை யூதர்களை நோக்கித்திருப்ப தொடங்கினர்.
யூதர்களை பிடித்து அடைப்பதற்காகவும், அவர்களை கொல்வதற்காகவும் பிரத்தியேகமாக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அவை ஜெர்மனியர்களால் “கெண்ஸ்ரன்;டேஷன் காம்ஸ்” என அழைக்கப்பட்டன. ஹிட்லரின் நாடு பிடிக்கும் வேட்கையினைவிட அவரின் யூத அழிப்பு வேட்கை தீவிரமாக இருந்தது.
1938 மார்ச் மாதத்தில் ஒஸ்ரியா ஜெர்மன் வசமானது. நாஜிப்படைகள் ஜெர்மனியில் செய்த யூதப்படுகொலைகளை ஒஸ்ரியாவிலும் செய்யத்தொடங்கினர். ஓஸ்ரியாவும் யூதப்பிணங்களால் நிறைய ஆரம்பித்தது.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் தொகையினைக் கண்டு உலக யூத இனமே வெலவெலத்துப்போனது. உலக நாடுகள் அனைத்திற்கும் சில வினாடிகள் மூச்சு நின்றுபோனது. 1941ஆம் அண்டு ஜூன் 22அம் திகதி ஹிட்லரின் நாஜிப்படைகள் சோவியத் ஜூனியனை தாக்கக்கிளம்பின. யுத்தத்தில் மூன்று வாரங்களில் ஐம்பதாயிரம் யூதர்களை கொன்றுகுவித்தனர். யூதக்குழந்தைகளை மேலே எறிந்துவிட்டு விழுவதற்கு முன்னரே சுட்டுக்கொன்றனர். பெரிய பெரிய கட்டங்களில் இருந்து மக்களை தள்ளிவிட்டு வலியில் துடிப்பவர்களை சுடடுக்கொன்றனர். “உலகின் மிகக்கொடுரமான மூன்றுவாரப்படுகொலைகள்” என சரித்திர ஆசிரியர்கள் இதனைக்குறிப்பிடுகின்றனர்.


யூதர்களை கொல்லாத தினங்களில் அவர்களால் இயல்பாக இருக்கமுடியாத நிலைக்கு மனநோயாளிகளாக நாஜிப்படைகள் ஆகினர். அக்கம் பக்கத்து கிராமங்களில் பகுந்து அங்குள்ள யூதர்கள் அனைவரையும் பிடித்துவந்து, தம்மால் தயாரிக்கப்பட்ட பாதாள சிறைகளில அவர்களை அடைத்து குழாய் வாயிலாக அதனுள் விஷ வாயுக்களை செலுத்தி பிடித்துவந்தவர்களை பெரும் பிணக்குவியலாக வெளியில் எடுத்தனர். இந்தச்சம்பவம் 1941 டிசெம்பரில் போலந்தில் எல்லையோரக்கிராமத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பா முழுவதும் உள்ள யூதர்கள் அனைவரையும் இன்னும் இரண்டு வருடத்தில் ஒழிப்பதற்கு இதுவே சிறந்தவழி என ஹிட்லர் திட்டமிட்டார். மேற்படி விஷவாயு சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. யூதர்களின் இறப்புத்தொகை இலட்சக்கணக்காக உயர்ந்தது.
நாஜிப்படைகள் கைப்பற்றிய நாடுகளில் இருந்த யூதர்கள் எல்லாம் சிறைப்பிடிக்கப்பட்டு. பிரிவு பிரிவாக புகையிரத வண்டிகளில் கொலைக்கூடங்களுக்கு அனுப்பி கொலை செய்யப்பட்டனர்.
இப்படி யூதர்கள் இரக்கமின்றி உலகிலேயே பெரும் கொடுமையாக அழிக்கப்பட்டுவந்தநேரத்தில், பலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் ஹிட்லருக்கே தமது ஆதரவு என பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா போரில் குதித்தது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கப்படைகள் ஜப்பான், இத்தாலி, ஜெர்மனியப்படைகளை துவம்வசம் செய்ய ஆரம்பித்தன. தேவையில்லாத வேலையாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தை தாக்கியது ஜப்பான். அவ்வளவுதான், ஜப்பானின் நாகஷாகி, ஹிரொஷிமா ஆகிய இரண்டு நகரங்கள் மீது அணுகுண்டினை வீசி தன் பலத்தினை உலகத்திற்கு முதனமுறையாக நிரூபித்தது அமெரிக்கா. எதற்கும் அஞ்சாத ஹிட்டலருக்குள்ளேயே உதறல் எடுக்க ஆரம்பித்த சம்பவம் அது.
இறுதியில் ஹிட்லரால் கொல்லப்பட்ட இருபது இலட்சம் யூதர்களின்மேல் எழுந்த இரக்கம் இஸ்ரேல் என்ற யூததேசம் உருவாவதற்கான எல்லா வாசல்களையும் திறந்துவைத்தது.

-தொடரும்.

6 comments:

Pradeep said...

பல தளங்களிலும் உங்கள் தொடரை மறுபிரசுரம் செய்துள்ளதை பார்த்தேன். வாழ்த்துக்கள்.

சமுத்திரன் said...

எப்படியாவது எதையெதையோ எழுதி தங்கள் தளங்களை நிறப்பி தங்களுக்கு தாங்களே விருதுகளையும் கொடுத்து தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று காட்டும் இன்றைய சில இலங்கை வலைப்பதிவர்கள் மத்தியில் இப்படித்தான் எழுதவேண்டும் இப்படி, இந்த வழியில்த்தான் எழுதவேண்டும் என்று காலத்தின் தேவைகருதி, மிக மிக ஆழமான விடயங்களையும் அலாக்காகத்தொட்டுச்செல்லும் உங்கள் எழுத்துக்கள் பாராட்டப்படவேண்டியவை. வாழ்த்துக்கள்.

Maruthankerny said...

"தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.
ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது.

வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும் இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை."

ஆறு அறிவு உள்ள அனைத்து தமிழரும் திரும்ப திரும்ப படித்து பார்க்க வேண்டிய வசனங்கள். உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்ற அடிப்படை அரசியல் தெரிந்தவர்களால் எளிதாக புரிய கூடிய இந்த வார்த்தைகளில் எந்த பொய்யும் இல்லை.

Nithiya said...

உண்மையில் இன்று எம்போன்ற தமிழ் இளைஞர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய தொடர். தங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா
உங்கள் பதிவுகள்
http://www.appaa.com/
http://www.yarl.com ஆகிய தளங்களில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளன.
– நித்தியா (சுவிஸ்)

மனோன்மணி said...

பதிவுகளுக்கு நன்றி நண்பரே. உங்களைப்போல உண்மையான தேவையான எழுத்தாளர்களும் இலங்கைப்பதிவாளர்களாக இருக்கின்றீர்கள் என்பதே மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கின்றது. காலத்தின் தேவைகருதி உங்கள் கல்வித்தரம் இப்படி எழுதவைப்பதை உணர்கின்றேன். ஆனால் மறுபக்கம் இலங்கை பதிவர்கள் என்று சொல்லிக்கொண்டு வானொலிகளில் ஒலிவாங்கிக்குப்பின்னால் இருந்து அறுப்பது பத்தாதென்று வலைப்பதிவையும் எழுதிக்கொண்டு இலங்கை வானொலியின் தரத்தை கெடுத்துவிட்டதுபோல இப்போது இலங்கை எழுத்தாளர்களின் தரமும் குறைந்தவிட்டதோ என்று எண்ணும் வகையில் தங்களைப்பற்றி மாறி மாறி புகழ்பரப்பி, என்ன எழுதுகின்றோம், ஏன் எழுதுகின்றோம் என்ற நோக்கம் இல்லாமல் எதையாவது எழுதுவோம் என எழுதி...தாங்கமுடியல.

Anonymous said...

Annaaaa
Honestly i have got no words on me. the article is grate

Vaikunthan JCC.

LinkWithin

Related Posts with Thumbnails