“இவனுக்கு கடலும் வானமும் எல்லை இல்லை! இவனே எல்லை!!”
மருதமூரான் தன்நிலை பற்றி விளக்கையில் கூறிக்கொள்ளும் ஒரு சொல்லிடை இது.
இது எவ்வளவுக்கு யதார்த்தமானது என்பதை மருதமூரானுடைய எழுத்துக்களை கண்ணுற்றோருக்கு நன்றாகத்தெரியும்.
ஒரு விடயத்தின் மேல், ஐயம்திரிபற்ற ஆழமான பார்வை, கனமான எடுகோள், மற்றவர்கள் தொடப்பயப்படும் இடங்களைக்கூட மிக இயல்பானதாக நேர்த்தியாக தொட்டுச்சென்று கனதியாக எழுதி, அனைவரையும் எழுத்தினால் கட்டிப்போட்டுவிடுவது மருதமூரானின் எழுத்தப்பாணி.
தங்கமயில் புருசோத்தமன் என்ற இயற்பெயரைக்கொண்ட மருதமூரான், யாழ்ப்பாணத்தின் மருதங்கேணியை பூர்வீகமாகக்கொண்டவர் என்ற காரணத்தால் தனது ஊரின் பெயரையே தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
ஊடகவிலாளரான இவர், தொழிலுக்காக அன்றி, பெரு விருப்பத்துடன் ஊடகவியல் என்ற துறையில் ஈடுபாடு உடையவராக இருக்கின்றார்.
சமுகம், அரசியல், சினிமா, விளையாட்டு, விமர்சனம் என்ற பல்வேறு பட்ட விடயங்களையும் எழுதிவருகின்றார்.
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், இதை இப்படித்தான் இவ்வாறு எழுதவேண்டும் என்ற ஒரு வரையறை போட்டு, தன் உச்சத்திற்கே சென்று அர்ப்பணிப்புடன், ஆணித்தரமாக எழுதும் ஒரு வலைப்பதிவனாக வலையுலகில் வலம்வருகின்றார் மருதமூரான்.
சமுகத்தில் சுற்றி நடக்கும் பல சம்பவங்களை, கண்ணுக்கு எதிரில் இடம்பெறும் சீரழிவுகள், அநியாயங்களை, மற்றவர்கள் நமக்கெதற்கு வீண்வம்பு என்று ஒதுங்கிச்செல்லும் நேரத்திலும், சமுக அக்கறையுடனும், தூரநோக்க பார்வையுடனும் அவற்றையே துணிந்து கருப்பொருளாக்கி, காத்திரமான பல பதிவுகளை தந்துள்ளார் மருதமூரான்.
ஒரு ஊடகவிலாளனாக சமுக, அரசியல், விளையாட்டு, உலகநடப்பு, சினிமா தகவல்களைத்தாண்டி இலக்கியத்திலும் தேடல் மிக்க ஒருவராகவும் சிறந்த தேடிவாசிக்கும் ஆர்வலனாகவும் மருதமூரான் இருக்கின்றார்.
மருதமூரானுடைய தேடல்கள் சாதாரணமானது கிடையாது. குறித்த ஒரு சம்பவம் இடம்பெற்றது என்றால், குறித்த ஒரு விடயம், இடம் மட்டும் இன்றி, உலகலாவியரீதியில் அந்த சம்பவங்களின் தொடர்புகைளை சென்று அறிந்துவிடும் நுணுக்கங்கள் மருதமூரானிடம் உண்டு.
அதேவேளை பல கருத்தாடல்கள்மூலம், தன் அறிவை பிறருக்கும், பிறர் அறிவை தனக்கும் பரிமாற்றிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை மருதமூரானிடம் நிறைய உண்டு. பல அவருடைய பதிவுகளும், அவரது பின்னூட்டங்களும் இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமையும்.
பேசும்போதுகூட நேர்த்தியாகப்பேசுவதும், சொல்லவந்த பொருளை சுற்றிவளைக்காமல் சொல்லிவிட்டு சென்றுவிடும் தன்மையும் மருதமூரானிடம் உண்டு.
பல தரப்பட்ட, பல பால்பட்ட, பல வயதுதரப்பட்ட, பதிவர்களையும் நண்பர்களாக மருதமூரான் பெற்றிருக்கின்றார். குறிப்பாக வலையுலக நண்பர்களின் மனம் கவர்ந்த ஒருவராக மருதமூரான் என்றும் உள்ளார்.
அடுத்து மருதமூரானின் சிறந்த பண்பு, சரியோ, தவறோ, பாராட்டோ, குற்றச்சாட்டோ, அதை அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி, தர்க்கரீதியில் சரியானதை அடையும் நடைமுறையாகும். “உங்களில் யார் உத்தமர்கள்? என்னையும் சேர்த்து கேட்கும் கேள்வி” என்று துணிச்சலாக பதிவெழுதி, தன்னையும் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கும் மனத்திடம் மருதமூரான் போன்ற சிலருக்கு மட்டுமே கைவரப்பெற்றதொன்று.
எத்தனை சிறப்பானதாக எழுதினாலும் தன்மேல் திருப்திப்பட்டுக்கொள்ளும் தன்மை மருதமூரானிடம் இல்லை. இன்னும் இன்னும் மெருகேறவேண்டும், எழுத்துக்கள் வளம்பெறவேண்டும் என்ற துடிப்பு மருதமூரானிடம் சிறப்பானதாக அவர் எழுத்துக்கள் ஜொலிக்கும்போதும் ஏற்பட்டுக்கொண்டிருப்பது பெரும் ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு ஊடகவியலாளன் என்ற முத்திரை சமுதாய அரசியல் பதிவுகளில் அப்படியே கொப்பளித்தாலும், அதன் ஆழத்தில் நாளை என்ற ஒரு நிரந்தரமான வசந்தம் பற்றிய ஒரு ஏக்கம் இழையோடிக்கொண்டிருப்பதையும் மருதமூரானின் பதிவுகளை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு புரியும்.
என்னதான், உணர்வுபூர்வமான விடயம் பற்றி எழுதினாலும்கூட, எந்த ஒரு சொல்லிலும் உணர்ச்சி வசப்பாடாது, இயல்பாக எழுத்துக்களை தன்பாட்டிற்கு ஓடவிட்டிருக்கும் வித்தைகள் மருதமூரானிடம் நிறைய உண்டு.
“நியூட்டல்” ஒரு ஊடகவிலாளனுக்கு ரொம்ப ரொம்ப தேவையான விடயம். ஆனால் இன்றைய கொடுமை, பல கட்சிகளே ஊடகங்களை நடத்த தொடங்கியதால் இந்த “நியூட்டல்” என்ற தத்துவம் துருப்பிடித்துவிட்டது கண்கூடு.
இந்த நிலையிலும், தம் இனம் சார்ந்த பதிவாக இருந்தாலும், இருபக்க நியாயங்களையும் ஆராய்ந்து சொல்லும் திடம் மருதமூரானிடம் நிறைய உண்டு.
சரி.. இன்றைய பதிவரான மருதமூரரிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும் அதற்கான அவரது ஆணித்தரமான பதில்களையும் பார்ப்போமா!
கேள்வி :உங்களின் பதிவுலகப் பயணம் எப்படி ஆரம்பித்தது?
மருதமூரான்: நான் தொழில்முறை ஊடகக்கல்வியை பயின்று வந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே எனக்கு வலைப்பூக்கள் அறிமுகமாயின. விடயங்களை மிக இலகுவாகவும், நகைச்சுவையுணர்வுடனும் எழுதியிருந்த வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், தொடர்ச்சியாக வலைப்பூக்களை தேடிச்சென்று வாசித்திருக்கிறேன். பின்னர் 2007ஆம் வருடம் என்னுடைய மிக நெருங்கிய நண்பரொருவரே என்னை வலைப்பூ எழுத தூண்டினார். அவரே, என்னுடைய தளத்தையும் உருவாக்கித்தந்தார்.
தமிழ் வலைப்பூக்களின் வசந்தகாலமாக 2007ஐ நான் குறிப்பிடுவேன். இந்திய- இலங்கை- புலம்பெயர் வலைப்பதிவர்கள் என்று எந்தவித பாகுபாடுமின்றி இருந்த காலகட்டமது. வலைப்பூக்களை எழுதவருவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்த தருணமும் அதுவே. புதியவர்களை பழைய பதிவர்கள் திறந்த மனதுடன் அரவணைத்த காலம். பதிவுலக சண்டைகள் ஆங்காங்கு நடந்து வந்தாலும் அவை பெரியளவில் தாககம் செலுத்தியிருக்கவில்லை. அவ்வாறானதொரு காலப்பகுதியில் என்னுடைய பதிவுலகப் பயணமும் மிகவும் இயல்பாகவும், சீரான போக்கிலும் இருந்தது. அந்தக்காலப்பகுதியில் (தற்போது இலண்டனிலிருக்கிற) மயூரன், வந்தியத்தேவன் உள்ளிட்ட இலங்கைப் பதிவர்களை நான் பதிவுகளினூடு படித்திருக்கின்றேன். பின்னூட்டமிட்டிருக்கிறேன். அவர்களும் என்னை ஊக்கப்படுத்தியிருந்தார்கள்.
ஆனாலும், 2008ஆம் ஆண்டு காலப்பகுதி சில நிகழ்வுகளினால் என்னை மட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. அதன், விளைவாக வலைப்பதிவுகளை பெரிதாக எழுதவில்லை. அதன் பின்னர் 2009களின் முதற்காலாண்டு பகுதியிலேயே மீண்டும் பதிவுலகத்துக்கு வந்தேன். அதன் பின்னர் எப்போதாவது ஒருசில பதிவுகளை எழுதி வருகிறேன். எழுதுவதற்கு விடயங்கள் இருந்தாலும் தட்டச்சுவதற்கு எனக்கிருக்கின்ற ஆர்வமின்மையால் அவை அப்படியே கிடப்பில் போட்டப்பட்டு விடுகின்றன. வாழ்வியல், அரசியல், சினிமா, விளையாட்டு என்று என்னுடைய விருப்பங்களை எழுதுகிறேன். நான் மிகத்தீவிரமாக செயற்படும் பதிவர் இல்லை. ஆனாலும், பதிவுகளை அதிகளவில் படித்துவருகின்றேன். அது இப்போதும் தொடர்கிறது.
கேள்வி: இலங்கை பதிவர்களுக்கும் உங்களுக்குமிடையிலான உறவு எப்படியிருக்கிறது. ஏதாவது முக்கியமாக குறிப்பிட விருப்புகிறீர்களா?
மருதமூரான்: முன்னாள் ‘மீ த பெஸ்ற்’ கங்கொனிலிருந்து இந்நாள் ‘சுடுசோறு’ மதிசுதா வரை என்னுடைய நண்பர்களே. நாளை வரவிருக்கும் பதிவர்களையும் நண்பர்கள் ஆக்கிக்கொள்ள தயாராக இருக்கின்றேன். வயது வித்தியாசங்கள் இன்றி நண்பர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படைக் கொள்கைக்கு நான் இருக்கின்ற ஊடகவியல்துறைக்கு அடுத்து, பதிவுலகமே அதிக வாய்ப்புக்களை வழங்கியது.
‘கருத்து மோதல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்கிற அடிப்படை கொள்கையை கொண்டிருக்கிறவன் என்கிற வகையில் அதனை நான் விரும்பியே வந்திருக்கிறேன். ஆனால், கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துக்கொள்ளாமல் தனிநபர் தாக்குதல்களிலும், இழிசெயல்களில் ஈடுபடும் நிலையும் ஆங்காங்கே தலைதூக்குவதைப் பார்க்கின்றபோது எரிச்சல் மேலிடுவது உண்மைதான். எங்குமே போட்டி அவசியம். அப்போதுதான் புதிய சிந்தனைகளுக்கு களம் கிடைக்கும். அதுவே, பதிவுலகுக்கும் வேண்டும். ஆனால், ஒருபதிவர் பிரபலமாகிவிட்டார் என்கிற காரணத்தினால் பொறாமைகொண்டு அவர்களை முறையற்றவிதத்தில் தாக்குவதும், வசைபாடுதலையும் வரவேற்க முடியாது.
அதுபோல, ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலிருக்கிற இலங்கைப் பதிவர்கள் குழும மனநிலையுடன் செயற்பாடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு கடந்த இரண்டு வருடங்களாக என்னிடத்தில் இருந்தது. ஆனாலும், சில மாதங்களாக அவை ஓரளவுக்கு குறைந்திருப்பதையும் காண்கிறேன். பிரிவினைகளும், பிரதேசவாதங்களும் இன்றி சர்வதேச ரீதியில் அனைவருடனும் போட்டிபோட்டுக்கொண்டு இலங்கைப் பதிவர்களும் செயற்பட வேண்டும் என்பது என்னுடைய விரும்பம். அதுசாத்தியப்பட வேண்டும்.
கேள்வி: பதிவுலகம் தவிர்ந்து ஓய்வுநேரங்களில் எவற்றில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?
மருதமூரான்: என்னுடைய ஊடகத்துறை தாண்டி, பதிவுலகத்தில் ஆர்வமுண்டு. அதேயளவுக்கு சினிமா, அரசியல், சமையல் உள்ளிட்டவற்றில் அதீத ஆர்வம் காட்டுவேன்.
சுரவெடி பேரரசு இயக்கிய படங்களிலிருந்து ராஜ்குமார் கிரானி, ஜேம்ஸ்கமரூன் வகையறா இயக்குனர்களின் படங்கள் என்று அனைத்தையும் பார்க்கிறேன். அதுபோலவே. நம்முடைய மேர்வின் சில்வாவின் அரசியலில் இருந்து ‘ஸ்பெக்ரம்’ ராஜா ஈறாக ஓபாமா வரையிலான அரசியலிலும் ஆர்வம் அதிகம். அது தொழில்முறையில் உதவியாகவும் இருக்கின்றது. அத்துடன், அதிக நேரம் கிடைத்தால் அசைவ உணவுகள் சமைப்பதில் ஆர்வம் காட்டுவேன். அதில், ஓரளவுக்கு சிறப்பாகவும் செய்வேன் என்று நினைக்கிறேன். இவைதவிர, கொஞ்சம் பேஸ்புக். நிறைய புத்தகங்கள். அளவான கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு. அவ்வப்போது ஏ.ஆர் ரஹ்மானும், இளையராஜாவும். எப்போதாவது, கடலை!!!. இவ்வளவுதான்.
மருதமூரானின் வலைத்தளம் - மருதமூரான்
25 comments:
ஐ, சுடுசோறு
அய்யா பருப்பு வடை..!!
அண்மைக்காலமாக சுடுசோருக்கு போட்டியாக வளர்ந்துவரும் நீருஜா மீது சுடு சோறு கண் வைப்பது நல்லது...ஹிஹி
ஆனா எண்ட தான் பருப்பு வடை..
இனி யாராச்சும் பாயாசம் போடுங்கோ!!
.................................................
அருமையான பதிவு..மருதமூரான்....நடமாடும் அரசியலிலில் இல்லாத சமோக சேவகன்!!
ஐஐஐ.........எனக்குதான் மசாலா வடை...
வாழ்த்துகள் அண்ணா...
அண்ணா பற்றி நானும் கொஞ்சம் அறியமுடிந்தது..நன்றி...
ஒரு சைவ சாப்பாட்டுக் கடையே நடத்துறீங்க போல ஆளாளுக்கு ஒரு ஐட்டம் எடுக்குறாங்க வாழ்த்துக்கள் மருதமூரான் குறைவாய் எழுதினாலும் நிறைவாய் எழுதுபவர்
வணக்கம் மருதமூரான் அண்ணே.
//ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலிருக்கிற இலங்கைப் பதிவர்கள் குழும மனநிலையுடன் செயற்பாடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு கடந்த இரண்டு வருடங்களாக என்னிடத்தில் இருந்தது//
எனக்கும் பல தடவைகள் அலுப்பையும் வாசிப்பு எரிச்சலையும் தந்த விடயம் அது. நேரடியாகவே சுட்டிக்காட்னீங்க மருதமூரான் அண்ணை. இப்ப குறையுதா??? குறைந்தால் சந்தோசம்.
//அதிக நேரம் கிடைத்தால் அசைவ உணவுகள் சமைப்பதில் ஆர்வம் காட்டுவேன்.
அப்ப எனக்கு மட்டன் வறுவல் கிடைக்குமோ?
நல்ல அறிமுகம்! நன்றி!
நல்லதோர் நண்பன், அண்ணா அவர் பற்றி சிறந்த அறிமுகம் ஜனா அண்ணா
சிறப்பு மிக்க சீரிய அறிமுகம்
என் சீனியர், நான் அதிகமாகப் பழகும் இலங்கைப் பதிவர்களில் ஒருவர்..
வணக்கம் மருதமூரான்
//அடுத்து மருதமூரானின் சிறந்த பண்பு, சரியோ, தவறோ, பாராட்டோ, குற்றச்சாட்டோ, அதை அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி, தர்க்கரீதியில் சரியானதை அடையும் நடைமுறையாகும்.//
உண்மை :)
அய்யா உழுந்து வடை மிஸ்ஸிங்...அத நான் சேர்க்கிறன்.
சிறந்ததொரு அறிமுகம் ஜனா அண்ணா.
தொடர்ந்து கலக்குங்கள் மருதமூரான்..வாழ்த்துக்கள்
எனது அபிமான வலைப்பதிவர்களில் ஒருவரான மருதமூரானை பற்றி எழுதியமைக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள் மருதமூரான்
வாழ்த்துக்கள் மருதமூரான்
வாழ்த்துக்கள் மருதம்.... எனக்கடுத்ததாக ஒருவர் வந்திருக்கிறார் அவரையும் அறிமுகப்படுத்தகிறேன்...
ஜனா அண்ணா அருமையாக உரைத்துள்ளீர்கள் இவர் அடிக்கடி ஒர வசனத்தை என்னிடம் கூறுவார். என்னை புரிந்தவரில் இவரும் ஒருவர்...
தங்கள் பணி தொடரட்டும் ஜனா அண்ணா...
வாழ்த்துக்கள் மருதம்ஸ்.....மருதம்ஸ் கொஞ்சம் இடுகைகளைக் கூட்டிக்கொள்ளவேண்டும் என்பது வேண்டுகொள். ரசிகன் என்பதையும் தாண்டி இவருடன் நட்பு ஒரு வித்தியாச அனுபவம் எனக்கு. இவர் மூலம் "நல்ல பதிவர்களை" பெற்றுக்கொண்டேன்.
நன்றி ஜனா, என்னை சக நண்பர்களிடம் அறிமுகம் செய்ததற்கு.
என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி
அருமையான பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க... வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் மருதமூரான் அண்ணா.... :-)))
//அடுத்து மருதமூரானின் சிறந்த பண்பு, சரியோ, தவறோ, பாராட்டோ, குற்றச்சாட்டோ, அதை அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி, தர்க்கரீதியில் சரியானதை அடையும் நடைமுறையாகும்.//
மிகச்சரி.....
வாழ்த்துக்கள் மருதமூரான்...
நன்றி ஜனா
வாழ்த்துக்கள் மருதமூரான்.
என் மனதில் மருதமூரான் பற்றி இருக்கும் உணர்வுகளையெல்லாம் அபாரமாக வடித்துள்ளீர்கள்.
அருமையான பதிவர்;அதையும் தாண்டி அருமையான மனிதர்.
பண்பு மாறாமல் இருக்க இவரிடம் பழகினாலே போதும்.எல்லோரைப் பற்றியும் அறிந்தும் எப்படி எல்லோரோடும் இவ்வளவு இயல்பாகப் பழகுகிறார் என்று அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன்
இவரின் பதிவுகள் காத்திரமானவை ஆனால் இவரோ நல்ல நகைச்சுவையான நண்பர். இவரின் எழுத்துக்களை வைத்து இவரை வயதில் மூத்தவர் எனப் பலர் எடைபோடுகின்றார்கள்.
Post a Comment