Thursday, June 4, 2009

மெல்லத் தமிழ் இனி (அச்)சாகும்!

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை. இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என கூறிக்கொண்டனர்.
அடுத்துவந்த சங்க கால இலக்கியங்களும், மிக மகோன்னதாமாக உள்ளது. தமிழர்களின் வாழ்க்கை முறைமைகளும், கலை எழுச்சி, ஏனைய துறை அறிவுகள் என்பவை அந்த இலக்கியங்களை படிக்கும்போது எங்களை பிரமிக்க வைக்கின்றது. ஏனெனில் அன்று வாழ்ந்த தமிழர்கள் உலகலாவிய ரீதியில் சகலகாலா வல்லவர்களாக தமக்கேயான அறத்துடனும், காதலுடனும், நேரம் ஏற்படும்போது வீரத்தை காட்டியும் சீரிய வாழ்க்கை முறை ஒன்றை வாழ்ந்துள்ளனர்.

நிற்க! விடயத்திற்கு வருவோம்… பழம்பெருமை பேசிச் சாவதே தமிழனின் பழக்கமாகிவிட்ட இந்தக்கால கட்டத்தில் நாங்கள் எங்கள் பழம்பெருமைகளை இத்தோடு விட்டுவிட்டு இன்று எமது மொழிமூலம் தமிழர்களை எப்படி வழர்த்துக்கொள்ளலாம் என்பதை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்வோம். தமிழை வளர்க்கிறோம் என இன்று பலர் கிளம்பி, தமது வியாபாரத்திற்கு அடைமானமாக தமிழை வைப்பதை இனி எந்த தமிழனும் அனுமதிக்கப்போவதில்லை. அனுமதிக்கவும் மாட்டான் என்பதில் பெரு நம்பிக்கை உண்டு.
சரி! ஆரம்ப காலத்தில் இந்த வேக எழுச்சி ஆரம்பப்பாய்ச்சல் பாய்ந்த எமது தமிழ் மொழியும், தமிழர்களும் நாளடைவில் ஏன் பின்தங்கினர்? அன்னியப்படையெடுப்பு, அடக்குமுறை, மொழிக்கலப்பு என்று தமிழர்களின் குணமாகிய மற்றவனை காரணம் காட்டுவதை விட்டுவிட்டு அந்த பிழையினையும் எங்கள் சீரியத்தமிழர்களுக்கு அடுத்துவந்த தமிழ் பரம்பரையினரே விட்டுள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டு எமது காலத்தில் மொழிக்கு நாம் என்ன செய்தோம்.. தற்போது எமது மொழி மற்றும் இன முன்னேற்றத்திற்கு ஏதுவான காரணிகள் என்ன? பாதகமான காரணிகள் என்ன என்பதை ஒரு ஆராய்ச்சியினை செய்வோமானால் அது ஆரோக்கியமானதொன்றே.
பல்வேறு பட்ட இனங்களுக்கிடையில் இடம்பெறும் அஞ்சல் ஓட்டமே, உலக ஓட்டம். அவர் அவர்கள், அவரவர்களுக்கான கோடுகளில் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். இதில் தமிழன் எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றான்? எத்தனை தரம் அஞ்சல் கோல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன? ஆரம்பத்தில் ஓட்டம் தொடங்கிய உடனேயே தமிழன் ஏனையவர்களைவிட மிக வேகமாக (ஏன் பாய்ச்சலாக என்று சொன்னாலும் தப்பில்லை) மற்றவர்கள் இரண்டு அடி எடுத்து வைப்பதற்கு முன்னரே அடுத்த தலைமுறைக்கு சுற்றிவந்து கோலை கொடுத்துவிட்டான். பின்னர் ஓடிய தமிழர்கள் ஆமை முயல் கதையில் வரும் முயலாக மாறிவிட்டனரோ என்னமோ தெரியவிலை. இடைக்கிடை தமிழர்களின் வானில் பிரகாச உடுக்களாக பல கவிஞர்கள், புலவர்கள் வரவில்லை என்றும் சொல்லி விடமுடியாது தான். எனினும் அது இலக்கியங்களுடன் மட்டுமே முற்றுப்பெற்றுக்கொண்டது.

தமிழ் சமுதாயத்தின் சமகால நிலை என்ன? தமிழ்ச் சங்கள் பல இன்றும் கம்பராமாயணத்திலும், கந்தபுராணத்திலும் இருந்து முற்றுமுழுதாக இன்னும் வெளிவரமுடியாமல் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். மற்ற மொழி இலக்கியங்களும், சமுகங்களும் நாங்கள் எட்டிக்கூட பிடிக்கமுடியாத அளவுக்கு சென்று விட்டார்கள்! இப்போது நாம் என்ன செய்வது?????? ஆங்கில மொழி ஆதிக்கம் ஒரு புறம், தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலத்தில் பேசுவதை பெருமை என்று நினைக்கும் மேதாவித் தமிழர்கள் ஒருபுறம், இந்த நிலையில் மற்ற மொழிகளின் நிலைக்கு வரமுடியாது தமிழ் ஆமைவேகம் போட்டு "முதுகில் பாரிய சுமைகளுடன்" வந்துகொண்டிருப்பது மறுபுறம்!! இவற்றுக்கெல்லாம் உச்சமாக " மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என பரிதாப்படும் யோக்கியவான்கள் ஒருபுறம் …. சொல்லுங்கள் இப்போது நாங்கள் என்ன செய்வது??????நிறைய யோசித்து குழம்பவேண்டாம்.

இளைஞர்களே … உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்.. சுமார் 5000 கால இடைவெளிக்கு பின்னர் தமிழ் அன்னையினை அழகு படுத்த இதோ … இந்தக்காலம் உங்களுக்காக மட்டுமே சிறப்பான ஒரு இடத்தை தந்துவிட்டுள்ளது."யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலம் இல்லாமல் எப்படி உலகெல்லாம் பரந்து சென்று பல பல விடயங்களை அறிந்து அவை முழுவதையுமே எப்படி தங்கள் இன வளர்ச்சிக்காக பின்னரான காலப்பகுதியில் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். அதே சந்தர்ப்பம் இன்று " ஈழத்தமிழர்களாகிய" உங்களிடம் மட்டுமே வந்துள்ளது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எங்கள் இனம் மேலும் ஒரு வருடம் பின்சென்று கொண்டிருக்கின்றது என எண்ணிக்கொள்ளுங்கள். இன்று ஈழத்தமிழர்கள் இல்லா நாடு இல்லை என்று சொல்லுமளவுக்கு உலகமெல்லாம் பரந்து வாழ்வது, கூடிழந்து அந்நிய கூடுகளில் கிடைத்துள்ள அடைக்கலம் " எனக் கூறிக்கொண்டாலும், கெட்டதிலும் ஒரு நன்மையினை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இன்று ஈழத்தவர்களுக்கு மேலைநாட்டு முக்கிய மொழிகளான ஆங்கிலம், பிரன்சு, டொச்மொழி, டனிஸ், ஸ்பனிஸ் என எத்தனையோ மொழிகள் எழுதவும் படிக்கவும் தெரியும் என்ற நிலை வந்துவிட்டது. உடனடியாக அங்கிருக்கும், அந்தந்த மொழியில் இருக்கும் அறிவியல், நவீனத்துவ, விஞ்ஞான, கல்வி, மற்றும் சமகால நடப்பு, என தமிழர்களை முன்னேற்றத் தேவையான நூல்கள் எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யுங்கள். ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் " மரபுகள் உடைக்கப்படும்போதுதான் புதியதொன்று உதயமாகின்றது" அதற்கேற்றால்ப்போல் தமிழுக்கும், தமிழர்களுக்குமான எனது காணிக்கை, நான் பிறந்த பலன் இது என எண்ணிக்கொண்டு மொழிபெயருங்கள். மரபுகள் உடைக்கப்படும்போது தான் புதியவைகள் உதயமாகின்றன என்பது உண்மைதான், அனால் உடைபடும் மரபுகள் எம் கலாசார அத்திவாரங்களை அசைத்துவிடாத அளவுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள். உங்கள், மொழிமாற்றத்தகவல்கள், புத்த வடிவிலும், கணனி ஏற்றத்திலும் முன்னெடுக்கப்படட்டும்.

எங்கே என்ன புதிய அறிமகமோ அடுத்த சில நாட்களில் தமிழனுக்கு அவைகள் ஐயம் திரிபுற புரிந்துகொண்டு அவனும் அதை பரீட்சார்தித்துப்பார்க்க வகை செய்யுங்கள். மெல்ல தமிழ் இனிச்சாகும் என்று சொன்னவர்கள் எல்லோரும், தமிழை வாழ வைத்த உங்களைப்பார்த்து, உங்கள் பிரவாகங்களைக்கண்டு வாயடைத்து, தமிழும், தமிழனும் அழிக்கப்படமுடியாதவன் என புரிந்துகொள்ளட்டும். உங்களால் முடியாது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள், நிச்சயம் முடியும். இமயம் ஏறி கொடிநட்டுத்திரும்பியவர்களையே, சறுக்கிவிழவைத்தவர்கள் நீங்கள் என்பதை மட்டும் மறந்தவிடாதீர்கள் ….இனி …மெல்ல தமிழ் அச்சாகும்.

1 comment:

Unknown said...

ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம்.......கண்டிப்பாக இனித் தமிழ் அச்சாகும்.

LinkWithin

Related Posts with Thumbnails