Wednesday, June 17, 2009

நாயின் தர்க்கம்…


உலகின் பெரும்பாலானவர்களும், பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்களும் கூட சமகால நிகழ்வுகளிலும் சரி, கடந்தகால வரலாறுகளிலும் சரி, ஒரு தூரநோக்கத்துடன் செயற்பட்டதாக எந்தப்பதிவுகளும் இல்லை. இதில் ஓரளவுக்கு அமெரிக்காவை தவிர்த்தே ஆகவேண்டும். ஏனெனில் அமெரிக்கா என்ற நாடு மட்டுமே எதிர்காலத்திற்கான திட்டங்களையும் இன்றே எடுத்து வருகின்றது. அது கூட இன்று அல்ல அவர்களின் இன்றைய செற்பாடுகளுக்கான திட்டங்கள் குறைந்தது 30 வருடங்களின் முன்னரே திட்டமிடப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது முதலாம் உலக நாடுகளும் சுதாகரித்துக்கொண்டு அமெரிக்காவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர் எனலாம். ஆனால் மூன்றாம் உலக நாடுகள் அந்தோ பரிதாபம் இன்றும் கூட, அவர்கள் தற்கால சிறு ஆதாயங்களுக்காக எதிர்காலத்து பயங்கர ஆபத்துக்களுக்கு வழிகோலிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஆளமாகச் சிந்தித்துப்பார்ப்பீர்களேயானால் இந்த உண்மை புரியும். இவர்கள் இன்றைய தமது சிறு ஆதாயங்களுக்காக, நாளை வரப்போகும் பேராபத்துக்கள் பற்றி சிந்திக்காமல், எதிர்கால தூரநோக்கப்பார்வை இல்லாமலே சென்றுகொண்டிக்கின்றன.
தொடர்ந்தும் தன்பாட்டிற்கு இருக்கும் ஆப்புக்களை வலியப்போய் இழுக்கும் குரங்குகளாகவே இவர்களின் செயற்பாடுகள் உள்ளன. மூன்றாம் உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் எங்கே இவர்கள் மீண்டும் மன்னர் ஆட்சி முறைக்கு திரும்பிவிட்டார்களோ என எண்ணும்படியாக, குடும்ப அரசியல், லஞ்சமும் அதிகார துஸ்பிரயோகமும் தலைவரித்தாடுதல், ஊழல்கள் என மேலும் மேலும் இந்த நாடுகளை படு பாதாளத்திற்கு கொண்டுசென்றுகொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்களிடம் எந்த ஒரு அதிகாரபூர்வ சர்வதேச அமைப்பும் உங்கள் நாடுகளின் அடுத்துவரும் 15 அண்டுகளுக்கான திட்டங்கள் என்ன? என கேள்வி எழுப்பி பார்க்கட்டும்? இந்தக்கேள்வியால் கண்டிப்பாக மூன்றாம் உலக நாடுகள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்ததுபோன்ற நிலையினையே அடைவர். ஏதோ வண்டி ஓடுகின்றது என்ற நிலையிலேயே இன்று மூன்றாம் உலக நாடுகளின் பயணங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.

முதலாம் உலக நாடுகளும் இவர்களை இப்படியே வைத்திருக்க கடன்களை தாராளமாக கொட்டிகொடுக்கின்றார்கள். ஒருவகையில் இவர்களின் சுய முன்னேற்றங்களை தடுத்து, கடன்களை அள்ளிவழங்கி, சில கடன்விலக்குகளையும் அறிமுகம் செய்து இவர்களை தம்மில் தங்கிவாழும் நாடுகளாகவே வைத்திருக்க முதலாம் உலக நாடுகள் திட்டங்களைப்போட்டு நிற்கின்றன.
ஆகவே பார்க்க இலாபமானதாக, இலகுவானதாக, சந்தோசமானதாக தெரியும் மேற்படி நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள், அவர்கள் தங்களையும் அறியாமல் தங்கள் முன்னேற்றத்தையே அழித்து, அதை ருசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
இதையே ஆங்கிலத்தில் Dog Logic (நாயின் தர்க்கம்) என்று அடைமொழியிட்டு வரையறை செய்கின்றனர். அதாவது ஒரு நாயினை எடுத்துக்கொண்டீர்களேயாளால் அந்த நாய்க்கு யாராவது ஒரு எலும்புத்துண்டை போட்டுவிட்டால்ப்போதும், அது தனக்கான உணவுத்தேடலையும் மறந்து அந்த எலும்புத்துண்டே சொர்க்கம் என நினைத்து அந்த எலும்புத்துண்டை கடித்தவண்ணமே இருக்கும். எலும்புத்துண்டை கடித்து உணவாக உட்கொள்ள என்றும் முடியாது. எலும்பை கடிக்க கடிக்க அந்த நாயின் நாக்கு, வாயின் உட்புறம் என்பவற்றில், எலும்பினால் கீறப்பட்டு உண்டான காயங்களில் இருந்து இரத்தமே கசியும், எனினும் அந்த நாய், அது தன்னுடைய இரத்தம் என நினையாது, அந்த எலும்பின் சுவைதான் அது என தொடர்ந்தும் அந்த எலும்புத்துண்டை கடித்தவண்ணமே இருக்கும்.

இந்த நாயின் செயற்பாடுகள் போன்றதாகவே இன்று மூன்றாம் உலக நாடுகளின் செயற்பாடுகள் உள்ளன. நாட்டில் வறுமை, பஞ்சம், வேலையின்மை, அபிவிருத்தி இன்மை என ஒருபுறம் பிரச்சினைகள் தலைவிரித்தாடும்போது, இந்த நாடுகள், ஏவுகணைப்பரிசோதனைகள், அணுகுண்டுப்பரிசோதனைகள் என நடத்துவதும், தங்கள் நிலை என்ன என்பது பற்றி தெரியாமல் தங்களைப்பற்றி அதீத எண்ணங்களை வளர்த்து உலக வல்லரசுகளுக்கே சவால்விடுவதும், பெரும் நகைப்பிற்குரிய விடங்களே.

அடுத்த ஒரு உலகப்போர் நடந்தால்ப்பாருங்கள், இந்த சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளை வல்லரசு நாடுகள் அல்ல மிகச்சில அபிவிருத்தி கண்ட சாதாரண நாடுகளே கைப்பற்றும் நிலைதான் ஏற்படும். எனக்கு ஒன்மட்டும் இன்றும் புரியவில்லை இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு ஐந்து இறுதி முடிவெடுக்கும் வீட்டோ அமைப்பு நாடுகள் என, வல்லரசு நாடுகள் என அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் தெரிவாகின, எந்த அடிப்படையில் சீனா இதில் தெரிவாகி வல்லரசு ஆகியது என இன்றுவரை எனககு புரியவில்லை. உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது படைஎடுத்துவந்த யப்பான் படையினர் முன்னாள் நிற்கவே பயம்கொண்டு தனது அரைவாசி நாட்டையும் யப்பான் படையிடம் கொடுத்துவிட்டு ஓடியதுதான் சீனா. அப்படி இருக்கையில் எந்த வகையில் சீனா அப்போது வல்லரசாகத் தெரிந்ததோ எனக்கு புரியவில்லை. மறுபக்கம் ஊழலில் சுழன்று, ஜனநாயகத்தையே பணத்தால் கேள்விக்குறி ஆக்கி, உலகமெல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு, அயல்நாடுகளிடமே பயம்கொண்டு அடக்கிவாசித்து வரும் இந்தியா 2020 ஆம் ஆண்டு தான் வல்லரசு ஆகிவிடும் என்று கனவுகாணுகின்றது.

மூன்றாம் உலக நாடுகள் தமது நாய்த் தத்துவங்களில் இருந்து வெளிவரவேண்டும். தமக்கு மத்திலேயே இருந்து வெற்றிகண்ட நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் முன்னேறத்திற்கு அவர்கள் போட்ட திட்டங்களை எண்ணிப்பாருங்கள். வெறும்சேரிதானே என நினைத்து மலேசியாவால் கழித்துவிடப்பட்ட சிங்கப்பூர் எவ்வாறு இன்று எழுந்துநிற்கின்றது? 20 க்கு 20 என இருபது அண்டு இலக்கை கொண்டு அனால் அந்த இலக்கிற்கு முன்னதாகவே இலக்கினை அடைந்து முன்னேறிய மலேசியாவை பாருங்கள். அந்த நாடுகளால் மட்டும் எவ்வாறு முன்னேற முடிந்தது.

இன்று மூன்றாம் உலக நாடுகளின் பின்தங்கல்களுக்கு காரணம் அரசியல்தான் என சாதாரணமாக சொல்லிவிட்டுபோய்விடலாம். ஆனால் அந்த அரசியலை மக்கள் தானே தீர்மானிக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் தெரிந்தும் பிழையானவர்களைத்தானே தெரிவு செய்கின்றார்கள். இப்படியாக இருண்ட பாதையில் நாடுகள் செல்லும்போதுதான் விரக்தியடையும் இளைஞர்கள் புரட்சியாளர் ஆகின்றார்கள். அவர்களை இந்த அரசியல்ப்பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் என்கின்றார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails