Friday, June 5, 2009

இயற்கையின் காதலராவோம்….

மனிதன், இயற்கை இந்த இரண்டும் எப்போது முரண்பட எத்தனித்தனவோ அப்போதே மனிதன் தனக்கான சவக்குழியை தோண்ட ஆரம்பித்துவிட்டான். இயற்கையில் ஒரு அங்கமே மனிதனே தவிர, மனிதனுக்காக இயற்கை இல்லை என்பதை அவன் ஏனோ மறந்துவிடுகின்றான். இந்த நிலையில் ஒவ்வொரு ஜூன் 05 ஆம் திகதிகளில் மட்டும் உலகில் பலருக்கும் சூழல் மீதான திடீர் அக்கறைகள் வந்துவிடும்.
ஆனால் உண்மையில் யோசித்துப்பாருங்கள் மனித இனம் தங்கள் சந்ததிகள் பற்றிய அக்கறை கொள்ளலில்லாமல் தான்தோன்றித்தனமான, கேவலமான சுயநலப்போக்கினாலேயே இன்று சூழலின் பாரிய அச்சுறுத்தல்களுக்கு காரணமாகிவிட்டான் என பல சூழலிலியல் ஆய்வாளர்கள் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

சீ.எப்.சீ பாவனைகளினால் ஓஸோன் மண்டலத்தில் ஓட்டை, மரங்களை கட்டுப்பாடின்றி வெட்டுவதால் பசுமைச் சுவர் சிதைப்பு, வாகனங்கள், தொழிற்சாலைகள் என்பவற்றின் புகைகளால் வளி மாசடைதல், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் இன்னும் எத்தனை???அடுக்கிக்கொண்டே போகலாம்….
இத்தகய நடவடிக்கைகளால் பூமிவெப்பமாதல் அதிகரித்து, வடதுருவத்தில் பனிக்கட்டிகள் உருகி, கடல்மட்டம் அதிகரித்து பல பிரதேசங்கள் நீரினுள் மூழ்கிவிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டிந்தது. இது தற்போது எதிர்பார்த்தைவிட பன்மடங்கு அதிகமாக நிகழ்வதாக புதிய பீதியை கிழப்பியுள்ளனர் விஞ்ஞானிகள்.
உலகம் தமக்கு லேசானது மனிதம் என்று நடத்தும் செயற்படாடுகள், தன் தலைக்கு மேலே பெரும் ஆபத்து இருப்பதையும் உணராமல் போய்கொண்டிருக்கின்றது. இயற்கையோ மனிதனை விட்டு எவ்வளவோ தூரங்கள் போய்விட்டது. எனினும் பல தடவைகள் இயற்கையும் தனது சக்தியை மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் காட்டிக்கொண்டே உள்ளது. ஆனால் மனிதன் தனது சுயநலத்தை விடுவதாகவே இல்லையே…

இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள், அமெரிக்கா என்றதேசத்தை கண்டு அங்கு குடியேறியபோது, அங்குள்ள இயற்கைகளை உருக்குலையச்செய்து, பூர்வீகர்களான பல செவ்விந்தியர்களை கொன்று அதன் அஸ்திவாரத்திலேயே அமெரிக்கா என்ற ஒரு தேசத்தை கட்டியெழுப்பியுள்ளனர்.
இந்தவேளையில் அன்றைய செவ்விந்தியத் தலைவன் “சியாட்டல்” அமெரிக்க ஏகாதிபதிகளிடம் தன்னுடைய வாசகங்கள் அடங்கிய முக்கியமான ஆவணம் ஒன்றை கொடுத்திருந்தான். அந்த வாசகங்களில் தங்கள் இனம் இயற்கைமீது கொண்டிருந்த காதலினை வரிக்கு வரி மேன்மையாக அவன் குறிப்பட்டிருந்தான்.
இந்த இயற்கையினை சீர்குலைக்கவேண்டாம் எனவும் அவன் கோரிக்கை விடுத்திருந்தான். அந்தக் காலங்களில் இயற்கையின் காதலர்களாகிய அவர்களின் ஒவ்வொரு வாசகமும் கண்களில் நீரை வரவழைக்கும்வகையில் இருந்தது.அதுவே “சியாட்டலின் வாசகம்” என்றழைக்கப்படுகின்றது.
செவ்விந்தியர்களைப் போலவும் சியாட்லைப்போலவும் ஒவ்வொருவரும்…இயற்கையின் காதலர்களாக இருப்போம், எவ்வளவு வளர்ச்சிகளை கண்டாலும், இயற்கையுடன் சேர்ந்தே வாழ்வோம்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails